×

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

*மீறினால் 2 வருடம் சிறை, ரூ.1 லட்சம் வரை அபராதம் என எச்சரிக்கை

சேலம் : சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் 2 வருடம் சிறை, ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமண சட்டம் 2006ன் படி, 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படுகிறது.

இதுபோன்று குழந்தை திருமணம் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலமும், நல்வாழ்வும் பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வயதிற்குகேற்ற உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுவதற்கான வாய்ப்பாக அமைகிறது. இதனையடுத்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.

மேலும், தற்பொழுது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில், பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால், அதை நடத்துபவர்கள், உடந்தையாக இருப்பவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ₹1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி எண்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், நடைபெற்ற 122 குழந்தை திருமணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், உடந்தையாக இருந்தவர்களுக்கும் சிறை தண்டணை மற்றும் அபராதம் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை 1098 மற்றும் 151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட சமூக நல அலுவலரை 0427-2413213, 91500-57631 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் சுகந்தி, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி இடை நிற்றலை கண்காணித்து நடவடிக்கை

தமிழகத்தில் குழந்தை திருமணத்திற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பள்ளி இடைநிற்றல் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியாக கள ஆய்வு செய்யப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதனுடன் சேர்த்து, பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் விவரங்கள் மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்கப்படும்.

அவர்கள் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து உரிய ஆலோசனைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அக்குழுவினர் மாணவர்கள் பள்ளி படிப்பைத் தொடரச் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!